`படிக்க பயமாக இருக்கிறது; வேறு கல்லூரிக்கு மாற்றுங்கள்'- விருதுநகர் கலெக்டரிடம் மாணவிகள் கண்ணீர்


விருதுநகர் தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி விசாரணை நடத்தினார். அப்போது, தங்களை வேறு கல்லூரிக்கு மாற்ற வேண்டும் என்று மாணவிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் அரசு எலக்ட்ரோ ஹோமியோபதி என்ற பெயரில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் சேர்மனான டாஸ்வின் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆபாச படங்களை அனுப்பியதாகவும், நிர்வாணமாக வீடியோ காலில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பிற மாணவிகளிடம் கூறவே கடந்த 11-ம் தேதி கல்லூரியின் முன்பு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, தகவல் அறிந்து வந்த அருப்புக்கோட்டை காவல்துறையினர் மாணவிகள் போராட்டத்தினை கைவிடாததால் டாஸ்வினை கைது செய்தனர். இவர் தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்துள்ளார். மேலும், பாஜகவின் அடிப்படை உறுப்பினராகவும் இருந்து வந்த நிலையில், நேற்று இவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி பாஜகவின் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் உத்தரவிட்டார்.

மாணவிகள், தாங்கள் படிப்பது தனியார் கல்லூரி என்பதால் எங்களது படிப்புக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும், கல்லூரியை மூடி விட்டால் எங்கள் படிப்பு கேள்விக்குறியாகிவிடும். இங்கு தவறு நடந்துள்ளதால் தொடர்ந்து படிக்க பயமாக உள்ளது. ஆகையால், படிப்பை நிறுத்தாமல் மாற்று கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மாணவிகள் போராட்டத்தின் போது விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி மாணவிகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் போது, மாணவிகள் தங்களை வேறு கல்லூரிக்கு மாற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். இந்த விசாரணையின் போது அக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

x