பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் தனது காரை உடைத்து எதிர்ப்பு தெரிவித்த சின்னத்திரை நடிகரின் வீடியோ சமூகவலைத் தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஏறு முகத்தில் உள்ள பெட்ரோல் விலை குறையாத காரணத்தால் தங்கள் வாகனத்தை பயன்படுத்துவதைத் தவிர்த்து பேருந்து, ஷேர் ஆட்டோ உள்ளிட்டவற்றில் வேலைக்கு செல்பவர்கள் அதிகரித்துள்ளனர். இந்த விலை உயர்வைக் கண்டித்து எதிர்கட்சிகளும், பொது மக்களும் தங்களது எதிர்ப்பை பல்வேறு முறைகளில் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை நடிகர் ஒருவரும் தனது காரை உடைத்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் என்கின்ற ‘கருத்து’ காமராஜ். சின்னத்திரை நடிகரான இவர் பல்வேறு டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காருக்கு பெட்ரோல் போட அதிகப் பணத்தைச் செலவழிப்பது அவருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தனக்குச் சொந்தமான காரை தானே கல்லால் அடித்து உடைத்து அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. அதற்கு ஆதரவுத் தெரிவித்து நிறையப் பேர் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.