புஞ்சைபுளியம்பட்டி அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு தயாரித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அதைத் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் வனப்பகுதி அருகே செல்லும் சாலையில் உள்ள குரும்பபாளையம் பகுதியில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் விசாரித்தனர். மேலும் அவர் கையிலிருந்த பையைச் சோதனை செய்தனர்.
20 நாட்டு வெடிகுண்டுகளும், வெடி மருந்து மற்றும் அலுமினிய பவுடரும் அந்த பையில் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சத்தியமங்கலம் அருகே உள்ள மேட்டுக்கடையைச் சேர்ந்த செல்லக்கிளி என்பவர் அவருக்கு வெடி மருந்து மற்றும் அலுமினிய பவுடர் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து வேலுச்சாமியிடமிருந்து 20 வெடிகுண்டுகள், வெடி மருந்து, ஒன்றரை கிலோ அலுமினிய பவுடர் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வேலுச்சாமி, செல்லக்கிளி மீது நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.