பலகாரம் சுட்டு வைத்திருந்த எண்ணெய் பாத்திரத்தில் தவறி விழுந்த ஒரு வயது பெண்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அக்குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பால்நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி ஷாலினி. இவர்களுக்கு பவிஸ்கா என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த 7-ம் தேதி பாலமுருகன் வீட்டில் முறுக்கு செய்தார். பின்னர் முறுக்கு செய்த எண்ணெய் பாத்திரத்தை வீட்டின் வெளியில் வைத்திருந்தார். அப்போது பக்கத்து வீட்டிற்கு விளையாடச் சென்ற குழந்தை வீட்டிற்கு வந்துள்ளது. முறுக்கு செய்த எண்ணெய் வைத்திருந்த கொதிக்கும் எண்ணெய்யில் குழந்தை பவிஸ்கா விழுந்து விட்டாள்.
இதில் உடல் முழுவதும் எண்ணெய் பரவிய நிலையில் வலியால் துடித்த பவிஸ்காவை பெற்றோர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பவிஸ்காவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி நேற்று பவிஸ்கா பரிதாபமாக இறந்தாள். மகள் இறந்த சம்பவம் அக்குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.