கைதி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்பட 5 காவலர்கள் சஸ்பெண்ட்


சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காலர்கள் உட்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், அலமாதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் என்ற அப்பு(30). ராஜசேகர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கொடுங்கையூரில் வீட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற வழக்கு ஒன்றிற்காக கொடுங்கையூர் போலீஸார் நேற்று ராஜசேகரை பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜசேகருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் போலீஸார் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ராஜசேகரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுத்தியதை அடுத்து போலீஸார் அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ராஜசேகரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கொடுங்கையூர் ஆய்வாளர் மில்லர்

சோழவரம் காவல் நிலையத்தில் ராஜசேகரை நேற்று விசாரணைக்கு அழைத்து வந்த கொடுங்கையூர் போலீஸார் அவரை லாட்ஜில் வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் விடுதியில் வைத்து போலீஸார் ராஜசேகரை கடுமையாக தாக்கியதால் அவர் அடிதாங்காமல் உயிரிழந்ததாக உறிவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விசாரணை கைதி சந்தேக மரணத்தை தொடர்ந்து சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, காவல் இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ராஜசேகர் சந்தேக மரணம் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சந்தேக மரணம் தொடர்பான வழக்கில் கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ணன், காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேக மரணம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x