விபத்து குறித்து விசாரிக்கச் சென்ற இரு காவலர்கள் வேன் மோதி உயிரிழப்பு: நள்ளிரவில் நிகழ்ந்த சோகம்!


விபத்து குறித்து விசாரிக்கச் சென்ற காவலர்கள் இருவர்கள் சுற்றுலா வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவில் நடந்த இந்த விபத்து காவல் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அணைப்பாளையம் பிரிவு பகுதியில் பாலப்பணிகளும், சாலை விரிவாக்கப் பணிகளும் நடந்துவருகின்றன. கடந்த நான்கு மாதங்களாக இந்தப் பணிகள் நடந்துவரும் நிலையில், சாலை ஆங்காங்கே தோண்டப்பட்டும், ‘டேக் டைவர்ஷன்’ எனும் பதாகைகளுடனும் உள்ளது. வழக்கமாக இந்த வழித்தடத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இது பரிச்சயம் என்றாலும், புதியவர்கள் சற்றே குழம்பிப் போகின்றனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற கார் ஒன்று, பாலம் வேலை நடப்பதால் பக்கவாட்டில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டிருப்பது தெரியாமல் தடுப்புச்சுவரின் மீது மோதி நின்றது. ஓசூரைச் சேர்ந்த அரியநாயகம் என்பவர் ஓட்டிவந்த இந்தக் கார் விபத்துக்குள்ளானாலும், பெரிய காயங்கள் ஏதுமின்றி அனைவரும் தப்பினர். அதேநேரம் கார் மிகவும் பழுதடைந்ததால் அதை மீட்க ரெக்கவரி வாகனம் தேவை என காவல் துறையிடம் அலைபேசி வழியே உதவிகோரினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ராசிபுரம் காவலர் தேவராஜ், புதுச்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்த சம்பவ இடத்திற்குச் சென்றனர். காரில் இருந்தவர்களுடன் விசாரணை நடத்திக்கொண்டிருந்த நிலையில் திருநள்ளாறு நோக்கி வந்துகொண்டிருந்த சுற்றுலா வேன், காவலர்கள் தேவராஜ், சந்திர சேகரன் ஆகிய இருவர் மீதும் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

காவலர்கள் இருவரும் தங்களோடு, தலா ஒரு ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸை அழைத்து வந்திருந்தனர். அவர்கள் அதேநேரத்தில் இன்னொரு டாரஸ் லாரியை தடுத்து நிறுத்திக்கொண்டிருந்ததால் வேறு இடத்திற்குச் சென்றிருந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்.

இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மாதையன், வேனில் வந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேரும் காயங்களுடன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்த காவலர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

x