குப்பைத் தொட்டியில் கிடந்த பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடலை மீட்ட காவல்துறையினர், குழந்தையை யார் வீசியது, அதன் பெற்றோர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ளது அ.கலையமுத்தூர் ஊராட்சி. இங்குள்ள மண்டைக்காடு பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இன்று பிற்பகலில் நாய்கள் ஏதோ ஒன்றை வெகுநேரமாக கடித்து இழுத்துக் கொண்டிருந்தன. அதை பார்த்த அப்பகுதி மக்கள் அருகே சென்று பார்த்த போது பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையின் சடலம் கிடப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பழனி தாலுகா காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசியது யார்? அதன் பெற்றோர் யார்? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.