15 வயது சிறுவனின் உயிரைப் பறித்த தூளிப்புடவை… கோடை விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்கு வந்தபோது நேர்ந்த துயரம்!


கோடை விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்குச் சென்ற 15 வயது சிறுவன் குழந்தைக்குக் கட்டிய புடவை தூளியில் கழுத்து இறுக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவொற்றியூர், விம்கோ நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம். ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இவரது மகன் தீபக் பள்ளி விடுமுறை என்பதால் குன்றத்தூர், மணிகண்டன் நகர்ப் பகுதியில் உள்ள அவரது உறவினர் மணிமாறன் வீட்டிற்குத் தம்பி விக்னேஷ் என்பவருடன் சென்றுள்ளார். மணிமாறனுக்குச் சமீபத்தில் குழந்தை பிறந்துள்ள நிலையில் குழந்தையைத் தூங்க வைப்பதற்காக வீட்டில் புடவையால் தூளி கட்டியுள்ளார். குழந்தைக்குத் தூளி கட்டியிருந்த அறையில் தீபக் மற்றும் விக்னேஷ் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் மணிமாறன் அறையைத் திறந்து பார்த்த போது, தீபக் குழந்தைக்குக் கட்டிய தூளியில் கழுத்து இறுக்கிய நிலையில் தொங்கி கொண்டிருந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணிமாறன் குடும்பத்தினர் தீபக்கை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீபக்கின் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்றத்தூர் காவல்துறையினர் தீபக்கின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், புடவையால் குழந்தைக்குக் கட்டிய தூளியில் விளையாடும்போது கழுத்து இறுக்கி தீபக் இறந்துவிட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

x