டேட்டிங் ஆப்பில் பழகிய இளைஞரை நம்பிய இளம்பெண்ணுக்கு ஓட்டலில் நிகழ்ந்த கொடூரம்!


டேட்டிங் ஆப் மூலமாக அறிமுகமான நபர், இளம்பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

மே 30 அன்று டெல்லியின் துவாரகா பகுதியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில், 28 வயது இளம்பெண்ணைப் போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரைக் கண்டுபிடிக்க டெல்லி காவல்துறை குழு ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய துவாரகா பகுதி துணை போலீஸ் கமிஷனர் ஹர்ஷவர்தன் மாண்டவா, "டெல்லியைச் சேர்ந்த 28 வயதான அந்த பெண்ணுக்கு, ஹைதராபாத்தை சேர்ந்த மோஹக் குப்தா என்ற நபர் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகியுள்ளார். அதன்பின் நண்பர்களாகிவிட்ட இருவரும் தங்கள் தொடர்பு எண்களை பரிமாறிக்கொண்டு தொடர்ந்து பேச ஆரம்பித்தனர்" என தெரிவித்தார்

மேலும், "மே 30 அன்று டெல்லிக்கு வந்த குப்தா அந்த பெண்ணை சந்திக்க வேண்டும் எனக் கூறினார், அவர்கள் இருவரும் துவாரகாவில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் சந்தித்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு போதைப்பொருள் கலந்த பானத்தை அவர் கொடுத்ததாகவும், அதனைக் குடித்துவிட்டு மயங்கியவரை ஹோட்டல் அறையில் அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். அடுத்த நாள், அந்த நபர் அப்பெண்ணை ஒரு மெட்ரோ நிலையத்திற்கு வெளியே இறக்கிவிட்டுள்ளார், அதன் பிறகு குப்தா இந்தப் பெண்ணின் அழைப்புகளை எடுக்கவில்லை. இதனைத்தொடர்ந்து ஜூன் 3-ம் தேதி அவர் போலீஸாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நபரை தேடிவருகிறோம்"என்று கூறினார்.

x