கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை, தனது கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பேரூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (36). லாரி ஓட்டுநர். இவருக்கு கனகலெட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். போதைக்கு அடிமையான கருப்பசாமி மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளாா். இந்த நிலையில் லாரியில் வெளிமாநிலத்திற்குச் சென்று விட்டு மூன்று மாதங்களுக்கு பின் ஜூன் 7-ம் தேதி கருப்பசாமி வீட்டுக்கு வந்தார். மறுநாள் காலை அவர் வீட்டு வாசலின் முன்பு கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது கிடந்தார்.
இக்கொலை குறித்து தட்டாபாறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது கருப்பசாமியின் மனைவி கனகலெட்சுமி மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்தனர்.
அதில், கருப்பசாமி குடித்து விட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடம்பூர் மகளிர் காவல்நிலையத்தில் கடந்த ஆண்டு கனகலெட்சுமி புகார் செய்யச் சென்றார். அவருக்கு சோழபுரத்தைச் சேர்ந்த அவரது உறவினர் டிரைவர் ரவிச்சந்திரன் உதவியுள்ளார். இதன் பின் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகியுள்ளனர். இதையறிந்த கருப்பசாமி மனைவியைக் கண்டித்ததுடன், சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரவிச்சந்திரனிடம் கனகலெட்சுமி கூறியுள்ளார். நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இதையறிந்து கருப்பசாமியும் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இந்த நிலையில், வெளியூரில் இருந்து 7-ம் தேதி வந்த ரவிச்சந்திரன் சாப்பிட்டு வாசலில் படுத்து உறங்கியுள்ளார். இந்த தகவலை ரவிச்சந்திரனுக்கு செல்போனில் கனகலெட்சுமி தெரிவித்துள்ளார்.
அன்று இரவே பேரூரணிக்கு வந்த ரவிச்சந்திரன் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த கருப்பசாமியை கத்தியால் கழுத்தை அறுத்தும், நெஞ்சில் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ரவிச்சந்திரனை கைது செய்த போலீஸார், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கருப்பசாமியின் மனைவி கனகலெட்சுமியையும் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.