`50 ஆயிரம் முதலீடு செய்தால் ஒரு லட்சம் தருகிறேன்'- ஆசைவார்த்தையை நம்பி ஏமாந்த சென்னை ஐஐடி மாணவி


பகுதி நேர வேலை தேடிவந்த ஐஐடி மாணவியிடம் 50 ஆயிரம் முதலீடு செய்தால் 1 லட்சம் தருவதாக ஆசை வாரத்தை கூறி 1.50 லட்சம் நூதன மோசடி செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சித்ரா தால்லூரு(18). இவர் சென்னை ஐஐடியில் தங்கி கெமிக்கல் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் சித்ரா பகுதி நேர வேலை வேண்டி இணையதளத்தில் தேடியுள்ளார். அப்போது வாட்ஸ்அப் மூலம் நித்திஷ்ரெட்டி என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. உடனே நித்திஷ், எங்கள் வங்கிக் கணக்கில் நீங்கள் செலுத்தும் தொகையை இரட்டிப்பாக தருவதாக சித்ராவிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சித்ரா, கடந்த 7-ம் தேதி தனது வங்கிக் கணக்கில் இருந்து நித்திஷ் கூறிய நபருக்கு போன் பே மூலம் 97 ஆயிரம் ரூபாயை செலுத்தினார்.

மறுநாள் (8-ம் தேதி) தனது நண்பர்கள் சிலரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயை வாங்கி நித்திஷ் கூறிய ஐசிஐசிஐ வங்கிக் கணக்கில் செலுத்தினார். 1.47 லட்ச ரூபாய் செலுத்திய பின்னர் நித்திஷ் கூறியதுபோல் எந்த பணமும் திருப்பி அனுப்பவில்லை. உடனே அந்த நபரை தொடர்பு கொள்ளமுயன்றபோது அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஐஐடி மாணவி சித்ரா, இது குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரின் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x