நீட் தேர்வுக்கு தயாரான மாணவி வனப்பகுதியில் சடலமாக மீட்பு: பைக்கில் அழைத்துச் சென்ற வாலிபரை தேடும் போலீஸ்


சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்த 17 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மூலம் பழகிய இளைஞர் இந்த மரணத்துக்கு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, கோட்டாவில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயின்று வந்தார். கடந்த ஒன்றரை மாதங்களாக விடுதியில் தங்கியிருந்த அவர், திங்கள்கிழமை காலை வழக்கம்போல பயிற்சிக்காக விடுதியில் இருந்து கிளம்பி சென்றார். அதன்பின்னர் அவர் விடுதிக்கு திரும்பாத காரணத்தால் அவர் காணாமல் போனதாக ஜவஹர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த சூழலில் அந்த சிறுமியின் உடல் கோட்டா வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரின் மரணத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக பேசிய ஜவஹர் காவல் நிலைய அதிகாரி ராம் சிங், "முழுவதுமாக உடை அணிந்திருந்த நிலையில் அச்சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. தலையில் கல்லால் தாக்கப்பட்டதில் அவர் கொல்லப்பட்டார் என தெரிகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்" என்று கூறினார்.

இந்த மரணம் தொடர்பாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த சிறுமி ஒரு இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அந்த சிறுமி குஜராத்தை சேர்ந்த இளைஞருடன் சமூக வலைதளங்கள் மூலம் நட்பாக பழகியது தெரியவந்துள்ளது. அந்த இளைஞன் சனிக்கிழமையன்று கோட்டா பகுதிக்கு வந்ததாகவும், இருவரும் திங்கள்கிழமை கோட்டா அணையை நோக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

x