பேருந்து நிலையத்தில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட மூவர்: தர்ம அடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!


ரகளையில் ஈடுபட்டவர்களுக்கு அடி, உதை

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் கத்தியைக் காட்டி பயணிகளை மிரட்டியவர்களை பொதுமக்கள் லாவகமாகப் பிடித்து, தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் நகர் மத்தியில் அமைந்துள்ளது காமராஜர் பேருந்து நிலையம். திருச்சி, மதுரை, கோவை, போடி, கம்பம், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்ல மையப் பகுதியாக திகழ்கிறது இப்பேருந்து நிலையம். இதனால், பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் மக்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத 3 பேர் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டிருந்தனர். வெகுநேரமாக இவர்கள் கையில் கத்தியை வைத்துக்கொண்டு பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவர்

மேலும், நேரம் ஆக ஆக இவர்களின் அட்டகாசங்களும் அளவில்லாமல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனை அறிந்த சில பயணிகள் சமயோஜிதமாகச் செயல்பட்டு அவர்களிடம் இருந்த கத்தியைப் பிடுங்கினர். இவர்களிடமிருந்து கத்தி பிடுங்கப்பட்டதை அறிந்த ஏனைய பொதுமக்கள் வெகுநேரமாக அராஜகத்தில் ஈடுபட்ட ஆசாமிகளுக்கு தர்ம அடி கொடுத்து, பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் தரையில் அமர வைத்து மீண்டும் அடித்து உதைத்தனர்.

பின்பு புறநகர் பகுதி காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அங்கு வந்த காவல் துறையினர் அந்த நபர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய இந்தப் பேருந்து நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியவர்களின் பின்னணி என்ன, இவர்கள் மீது குற்ற வழக்குகள் ஏதும் நிலுவையில் உள்ளதா என்றெல்லாம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x