மயிலாடுதுறையில் சிக்கிய ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே கடந்த பிப்ரவரி மாதம் போலீஸார் சந்தேகத்திற்கிடமான சில நபர்களைக் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்கள் போலீஸாரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினர். இதனைத் தொடர்ந்து துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் மயிலாடுதுறையைச் சேர்ந்த சாதிக்பாஷா, ஜாபர் அலி, கோவையைச் சேர்ந்த முகமதுஆஷிக், காரைக்காலைச் சேர்ந்த முகமது இர்பான், சென்னையைச் சேர்ந்த ரஹ்மத் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்த கும்பலுக்கு, தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்தது. மேலும் இந்த கும்பல் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிற்கு (என்ஐஏ) மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. விசாரணையில் சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் சமூக வலைதளம் வாயிலாக ஆட்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததும், பல இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி வந்ததும் என்ஐஏவிற்கு தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளுக்குச் சொந்தமான 8 இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக சென்னை அயனாவரத்தில் உள்ள ரஹ்மத் வீட்டிலும், மண்ணடியில் உள்ள ஒரு வீடு என சென்னையில் 3 இடங்களிலும், மயிலாடுதுறை, காரைக்கால், கோவை என மொத்தம் 8 இடங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கும்பலுக்கும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கும் நேரடி தொடர்பு உள்ளதா, இவர்கள் கூட்டம் நடத்த நிதி உதவி எங்கிருந்தாவது பெறப்படுகிறதா என்பது உள்ளிட்ட ஆதாரங்களைத் திரட்டும் பணியில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்களுக்கு துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வழங்கியது யார், இவர்களுக்குப் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்தும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.