பப்ஜி கேம் விளையாட விடாமல் தடுத்த தாயைச் சுட்டுக் கொன்ற மகன்: பிணத்தை 2 நாளாக மறைத்து வைத்த கொடூரம்


லக்னோவில் ஆன்லைன் கேம் விளையாடுவதைத் தடுத்ததால், 16 வயது சிறுவன் தனது தந்தையின் கைத்துப்பாக்கியால் தனது தாயையே சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அவரது உடலை இரண்டு நாட்கள் வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்களின்படி, இந்த சிறுவன் 'பப்ஜி' கேமுக்கு அடிமையாக இருந்ததையும், அந்த விளையாட்டை விளையாடவிடாமல் தாய் தடுத்ததால் தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அவர் தனது தாயை சுட்டுக் கொன்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு நாட்களாக அவரின் சடலத்தை வீட்டின் அறையில் அந்த சிறுவன் மறைத்தும் வைத்திருந்தார் என்றும், இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் உன்னையும் கொன்றுவிடுவேன் என்று தங்கையையும் மிரட்டியுள்ளார் எனவும், உயிரிழந்த தாயின் உடலிலிருந்து ஏற்பட்ட துர்நாற்றத்தை மறைக்க அச்சிறுவன் தொடர்ந்து ரூம் ப்ரெஷ்னரைப் பயன்படுத்தியுள்ளார் எனவும் போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கணவர் தொடர்ந்து அவரின் செல்போனுக்கு அழைத்தும் எடுக்காததால், அவர் தனது உறவினர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையில் செவ்வாய்கிழமை இரவு புகார் அளிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. பிறகு தீவிர விசாரணை நடத்தி அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு தற்போது சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கொலை

இந்த சிறுவனின் தந்தை இந்திய இராணுவத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே இந்த சிறுவன் பெற்றோரிடம் சண்டையிட்டு பலமுறை வீட்டைவிட்டு ஓடியுள்ளார் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

x