நூற்பாலையில் பணிபுரிந்த வட மாநில தொழிலாளர் சட்டையில் தூக்கு மாட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தற்கொலையா, கொலையா என்று வேடசந்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேடசந்தூர் - திண்டுக்கல் சாலையில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது சோவன தாஸ் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வந்தார். இவர் வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் அமைந்துள்ள தனியார் நூற்பாலைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கி வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை விடுதியின் உட்பகுதியில் உள்ள மரத்தில் சட்டையில் கழுத்தை மாட்டி உயிரற்ற நிலையில் தொங்கிக்கொண்டிருந்ததைக் கண்ட விடுதியில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்கள் உடனடியாக வேடசந்தூர் காவல் துறையினர் மற்றும் நூற்பாலை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த, வேடசந்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, சட்டையில் எவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடியும் என்ற சந்தேகம் காவல் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் வேடசந்தூர் காவல்துறையினர் நூற்பாலை நிர்வாகிகள் மற்றும் விடுதியில் தங்கியிருந்த வடமாநிலத் தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.