உத்தமபாளையம் அருகே வாய்க்காலில் ரத்தக்கறை படிந்த சாக்கு மூட்டை கிடந்ததால் பீதி அடைந்த பொது மக்கள், காவல் துறையினர் மீட்ட பின்பு சாக்கு மூட்டையில் இருந்தது மருத்துவக் கழிவுகள் என்பது தெரிய வந்தது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ளது அனுமந்தன்பட்டி. மக்கள் நடமாட்டம் பெரிதும் இல்லாத பகுதியான இங்கு இன்று காலை நடைபெற்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அப்பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றில் ரத்த கறையுடன் சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் யாரையாவது கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி மர்ம நபர்கள் யாரேனும் வீசிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
தொடர்ந்து இது குறித்து, உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறைக்கும் தகவல் அளித்தனர். அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாக்குமூட்டையை வெளியே கொண்டு வந்து திறந்து பார்த்தனர். அதில், மருத்துவக் கழிவுகள் இருந்தது தெரியவே நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மேலும், இதனை இங்கு வீசியது யார்? ஏன் வாய்க்காலில் வீசிச்சென்றனர்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாக்குமூட்டையில் சடலம் இருப்பதாக வதந்தி பரவவே பொதுமக்கள் ஏராளமானோர் அப்பகுதியில் கூடினர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.