`கூட இருந்தே எப்படிடா குழிப்பறிக்க தோணுது'- ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்


சஞ்சய்

ஆன்லைன் விளையாட்டு விளையாடி பணம் தோற்றதால் மனமுடைந்த இளைஞர் ஒருவர், "என்னை மாதிரி யாரும் அடிக்ட் ஆகாதீங்க, ஆன்லைன் கேமில் ஏமாறாதீங்க" என்று தனது செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்த ராஜலிங்கம்- சத்யபாமா தம்பதியின் மகன் சஞ்சய் (23). சத்யபாமா ராஜலிங்கத்தை பிரிந்து வாழ்வதால் சஞ்சய் தாயுடன் வசித்து வந்தார். கேட்டரிங் படித்துள்ளார். மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் பொருளாதார நிலை சரியில்லாததால் சத்யபாமா அவரை மேற்படிப்பு படிக்க வைக்கவில்லை. அதனால் அவர் கிடைத்த வேலைகளை செய்து வந்திருக்கிறார். போதிய வருமானம் இல்லாத நிலையில் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு தங்கள் வீட்டில் சஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சஞ்சய் ஆன்லைன் விளையாட்டு விளையாடி வந்ததாகவும், ஒரு சில முறை வெற்றிப்பெற்றதால் அதற்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சஞ்சய் ஐடியை யாரோ ஹேக் செய்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.30,000 வரை எடுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவற்றால் சுமார் ஒரு லட்சம் ரூபாயை அவர் இழந்துவிட்டாராம்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சஞ்சய், கேம்முக்கு யாரும் அடிக்ட் ஆகாதீங்க, என்ன மாதிரி ஏமாறாதீங்க. எதாவது சாதிங்க என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக போலீஸார் கூறுகிறார்கள்.

அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், "கூட இருந்தே எப்படிடா குழிப்பறிக்க தோணுது. இப்பவும் ஒண்ணு இல்ல. யார்னு சொல்லிடுங்க வேறு நம்பர்ல இருந்து அனுப்பியிருங்கடா , ரொம்ப டிப்ரஷனா இருக்கு, யாரும் கேம்முக்கு அடிக்ட் ஆகாதீங்க. என்ன மாதிரி யாரும் ஏமாறாதீங்க, லைப்ல ஏதாச்சும் அச்சீவ் பண்ணுங்க'' என ஸ்டேடஸ் வைத்துள்ளார். இதன் மூலம் அவரை யாரும் ஏமாற்றி பணம் பறித்தார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

x