தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ?- பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட 10-ம் வகுப்பு மாணவன்


தேர்வில் தோல்வி அடைந்துவிடுமோ என்ற பயத்தில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நசரத்பேட்டை நடராஜன் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சதீஷ்(17) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சதீஷ் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். சதீஷ் பொதுத்தேர்வு சரியாக எழுதவில்லை என கூறப்படுகிறது. குறைந்த மதிப்பெண்தான் கிடைக்கும் என்று எண்ணிய சதீஷ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக நேற்று இரவு சதீஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உள்ளே சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தாய் தனலட்சுமி அறைக்கு சென்று பார்த்தபோது சதீஷ் தூக்கில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தனலட்சுமி அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சதீஷ் உடலை இறக்கி வைத்துவிட்டு நசரத்பேட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் மாணவன் சதீஷ் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவன் சதீஷ் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் மாணவன் சதீஷ், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு சரியாக எழுதாததால் குறைந்த மதிப்பெண்தான் கிடைக்கும். ஆகையால் தனது படிப்பிற்காக மேற்கொண்டு எந்த செலவும் செய்யவேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். பொதுத்தேர்வு முடிவுக்கு பயந்து மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

x