பிறந்த நாளில் மது விருந்து: பார்ட்டிக்குச் சென்ற நண்பர்களுக்கு நள்ளிரவில் நேர்ந்த துயரம்!


ஸ்ரீபெரும்புதூர் அருகே நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிய இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த அறநெறி பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் கருணாகரன். பாலகிருஷ்ணன் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும் சொந்தமாகச் சரக்கு வாகனங்களை வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்தார். அவரிடம் வாகன ஓட்டுநராகக் கருணாகரன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இருவரும் இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் சென்றனர்.

பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் நடைபெற்ற மது விருந்தில் இருவரும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. விழாவை முடித்துக்கொண்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டனர். ஏனாத்தூர் பகுதியில் சென்றபோது நிலைதடுமாறி தரைப்பாலத்தில் மோதி கீழே விழுந்தனர். பாலத்தின் கீழே தண்ணீர் தேங்கி இருந்த காரணத்தினால் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கருணாகரனை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை பலனின்றி கருணாகரன் மருத்துவமனையில் உயிரிழந்தார். பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட இருவரும் மது அருந்தி வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x