நீதிமன்றத்திற்கு அளித்த உறுதிமொழியை மீறியதாக சாட்டை துரைமுருகனின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்தவர் சாட்டை துரைமுருகன். இவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர். இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய வழக்கில் தஞ்சாவூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இவருக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, " இனிமேல் யார் குறித்தும் அவதூறாகப் பேசக்கூடாது" என நிபந்தனை விதித்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் குமரி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி சாட்டை துரைமுருகன் கைதானார்.
இதையடுத்து நீதிமன்றத்துக்கு அளித்த உறுதி மொழியை மீறியதால், தஞ்சை வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸ் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அவர் யூடியூப் தொடர்பான விதிகள், சமீபத்திய சட்டத்திருத்தங்கள் மற்றும் முழு விவரங்களைத் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் சாட்டை துரைமுருகனுக்கு தஞ்சை வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து நீதிபதி புகழேந்தி இன்று உத்தரவிட்டார். மேலும், சமூக வலைதளக் குற்றங்களைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை அரசு உருவாக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.