பழிக்குப்பழியாக லோடுமேன் கொலை: அதிமுக, திமுக நிர்வாகிகள் 6 பேர் கைது


கொலையுண்ட அரவிந்தன்

சுமை தூக்கும் தொழிலாளியைப் பழிக்குப் பழியாகக் கொலை செய்த வழக்கில் அதிமுக ஊராட்சி மன்றத்தலைவர், திமுக நிா்வாகிகள் உள்பட மேலும் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சேனையாபுரம் காலனியைச் சேர்ந்தவர் அரவிந்தன்(28). சுமைதூக்கும் தொழிலாளியான இவர், கடந்த மார்ச் 30-ம் தேதி கொலை செய்யப்பட்டார். எம்.புதுப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணனை, அரவிந்தன் உள்ளிட்டோர் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்தனர். அக்கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் நவநீதகிருஷ்ணனின் நண்பர்கள் அரவிந்தனைக் கொலை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக, நேருஜி நகரைச் சேர்ந்த மாரீஸ்வரன் (26), இந்திராநகரைச் சேர்ந்த மணிகண்டபிரபு (18), சிலோன் காலனியைச் சேர்ந்த ஹரி குமார் (21) மற்றும் முத்துராமலிங்கபுரம் நகரைச் சேர்ந்த அருண்பாண்டியன் (30), பாா்த்திபன் (32), முத்துகிருஷ்ணன் (33), பாண்டியராஜன் (19), மகேஷ்வரன்(19), மதன்குமார்(32), பழனிச்செல்வம் (37) ஆகிய 10 பேரை ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்தனா்.

தொடர்ந்து, கொலை சம்பவத்தில் தொடா்பு உள்ளதாக ஆனையூர் ஊராட்சி மன்றத்தலைவரும், அதிமுக ஒன்றியச் செயலாளருமான லட்சுமி நாராயணன்(38), திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளா் அந்தோணிராஜ் (35), திமுக மாணவர் அணி துணை அமைப்பாளா் பிரவீன்(35), முத்துராமலிங்கம் நகர் பொன்ராஜ் (25), சவுந்தர் (25), சமத்துவபுரம் ஜோதிலிங்கம் (22) ஆகிய 6 பேரை நேற்று இரவு கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 10 பேரின் கைபேசிகளை ஆய்வு செய்த போது, அதே கொலை வழக்கில் இந்த 6 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது" என்றனர்.

x