ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக உயர் நீதிமன்ற நீதிபதி அதிரடியாக அறிவித்ததையடுத்து, ஜாமீன் மனுவை மதன் தரப்பு வாபஸ் பெற்றது.
ஆபாசமாக பேசிக்கொண்டு பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழிக்கு பப்ஜி மதன் கொண்டு செல்வதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், அவர் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் கடந்த (2021) ஆண்டு ஜூன் 18-ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்டார். பின்னர் சைபர் சட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார் மதன். குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
மதன் தரப்பில், விளையாட்டின் போது பேசிய வார்த்தைகளை மட்டுமே காரணம் காட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் விளையாட்டில் கலந்துகொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. மேலும் பண மோசடி செய்த தொகையில் ஒரு கோடியே 7 லட்சம் ரூபாயும், 2 கார்களையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. விருப்பப்பட்டு விளையாட்டில் சேர்ந்தவர்களிடம் மட்டுமே விளையாட்டின் மூலம் உரையாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்காத நிலையில் உள்ளதாகவும், 316 நாட்களாக சிறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில், விளையாட்டில் கலந்து கொண்டவர்களிடம் கரோனா நிதி என கூறி 2 கோடியே 89 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளதாகவும், விளையாட்டில் சேரும் சிறுவர்களை தவறான வழியில் நடத்தியதாகவும் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விளையாட்டை பயன்படுத்தி சிறுவர்கள் உள்ளிட்டோரிடம் தவறாக பேசியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், தற்போதைய நிலையில், மதன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார். அப்போது மதன் தரப்பில் ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதி இளந்திரையன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.