மகன் தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாளாமல் அவரது தாய், தந்தை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் இன்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் புனித நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் முதியவர் மற்றும் மூதாட்டி சடலமாக மிதந்தனர். இதனைக் கண்ட பக்தர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கடலில் மிதந்த முதியவர் மற்றும் மூதாட்டியின் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பது தெரிய வந்தது.
முதற்கட்ட விசாரணையின் படி காவல்துறையினர் கூறுகையில், இறந்தவர்கள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (62) கூட்டுறவு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும், அவரது மனைவி தனலட்சுமி (59) காதிகிராப்டில் ஊழியராக பணியாற்றி வந்தார் என்பதும் தெரியவந்தது. கடந்த 3-ம் தேதி கோவிந்தராஜும், அவரது மனைவியும் ராமேஸ்வரம் வந்து தங்கியுள்ளனர். இவர்களது 23 வயது மகன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான தம்பதியினர் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, இருவரும் துணியால் தங்களது உடலை கட்டிக்கொண்டு கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும், தங்களது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளனர் அதில், "தற்கொலை செய்து கொண்ட தங்களது மகன் பெயரில் அறக்கட்டளை அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்றும், அறக்கட்டளை அமைக்க தங்களது சொத்தை விற்று விடுமாறும் தெரிவித்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.
இதுபற்றி, ராமேஸ்வரம் காவல்துறையினர், கோவை மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் தம்பதியினர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் அவர்களது உறவினர்களுக்கத் தெரிவிக்கப்பட்டது. இருவரது உடல்களையும் காவல்துறையினர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.