காவலர்களிடமிருந்து தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி சாலை விபத்தில் உயிரிழப்பு!


தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெற்றுவரும் நிலையில், கஞ்சா விற்பனையாளர்களைப் பிடிக்க காவல் துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தந்த மாவட்ட எஸ்.பி-க்களின் மூலம் கஞ்சா விற்பனையாளர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்களது வங்கிக்கணக்கும் முடக்கப்பட்டு வருகிறது. அத்துடன், தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

காவல் துறை சார்பில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவது குறித்து தெரியவந்தால் புகார் செய்வதற்கும் பிரத்யேக வாட்ஸ்-அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கடமன்குறிச்சி பகுதியில் பொன்னுசாமி என்பவர் கஞ்சா வியாபாரம் செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இவர் அந்தப் பகுதியில் தங்கியிருந்த வடமாநில கூலித் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து கஞ்சா விநியோகித்து வந்துள்ளார். பொன்னுசாமியை நேற்று நள்ளிரவு மடக்கிப்பிடித்த போலீஸார் அவரை கூம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

திடீரென போலீஸாரின் பிடியில் இருந்து பொன்னுசாமி தப்பியோடினார். அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதியதாகவும், இந்த விபத்தில் அவர் உயிர் இழந்துவிட்டதாகவும் காவல் துறை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

போலீஸின் கைது நடவடிக்கைக்கு பயந்து தப்பியோடிய கஞ்சா வியாபாரி, விபத்தில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x