கோவையில் சாலையில் சென்ற பெண்ணை இடித்து விட்டுச் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை நிறுத்தி நியாயம் கேட்ட ஸ்விக்கி ஊழியரை போக்குவரத்து ஊழியர் சரமாரியாகத் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
கோவை மாவட்டம், நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம், உணவு டெலிவரி செய்யு ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று தனியார் பள்ளி வாகனம் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. அப்போது அருகிலிருந்த மோகனசுந்தரம் அந்த பள்ளி வாகனத்தை நிறுத்தி நியாயம் கேட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் சதீஷ்," இதை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம். நீ யார்?" எனக்கேட்டு மோகனசுந்தரத்தை சரமாரியாக தாக்கினார். மேலும், " அந்த பள்ளி வாகனம் யாருடையது எனத் தெரியுமா?" என மோகனசுந்தரத்தின் கன்னத்தில் அறைந்தார். அத்துடன் அந்த ஊழியரின் செல்போனையும் பறித்துச் சென்றார். இந்த காட்சி சமூக ஊடங்களில் வைரலானது.
இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான மோகனசுந்தரம் கோவை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், " நான் ஸ்விக்கியில் டெலிவரி பாயாக பணியாற்றி வருகிறேன். நேற்று மாலை டெலிவரி பணியில் இருந்தேன். அப்போது தனியார் பள்ளி வாகனம், ஒரு பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. நான் அந்த வண்டியை நிறுத்த முயன்று நியாயம் கேட்டேன். உடனே அங்கிருந்த போக்குவரத்து காவலர் சதீஷ் என்னை அடித்து, என் செல்போன், ஹெட்போன், கீ செயின் ஆகியற்றை பிடுங்கிச் சென்று விட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று கூறியிருந்தார். இதையடுத்து மோகன சுந்தரத்தை தாக்கிய காவலர் சதீஷ், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.