காரில் விளையாடிய போது விபரீதம்… கதவைத் திறக்க முடியாமல் மூன்று குழந்தைகளுக்கு ஏற்பட்ட சோகம்!


திருநெல்வேலி மாவட்டம் பணக்குடியில் காரில் விளையாடிய போது கதவைத் திறக்க முடியாமல் மூச்சு திணறி மூன்று குழந்தைகள் சற்றுமுன் உயிர் இழந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பணக்குடி அருகே உள்ள லெப்பைக் குடியிருப்பில் நீண்டகாலமாக பயன்படுத்தாமல் ஒரு கார் நின்றது. அந்தகார் வெளியே இருந்து திறக்கும்படியும், காருக்குள் இருந்து திறக்க முடியாதபடியும் பழுதடைந்து இருந்துள்ளது. இதைப்பற்றி அறியாத அப்பகுதியைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் இன்று காரில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். மீண்டும் வெளியே வருவதற்கு ஏதுவாக குழந்தைகளுக்கு காரை திறக்க முடியவில்லை. முற்றிலும் கதவுகள் அடைபட்ட நிலையில் வெளியே வர முடியாமல் குழந்தைகள் காருக்குள் சிக்கிக் கொண்டனர்.

குழந்தைகளுக்கு இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, நாகராஜன் என்பவரது மகள் நித்திரை(7), மகன் நிதிஷ்(5), சுதாகர் என்பவரது மகன் கபிலன்(4) ஆகிய மூன்றுக் குழந்தைகளும் உயிர் இழந்தனர். ஒரு குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக் குறித்து பணகுடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நின்றுகொண்டிருந்த காருக்குள் குழந்தைகள் மூச்சுத்திணறி பலியான சம்பவம் பணக்குடி சுற்றுவட்டார மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

x