ஸ்மார்ட்போன் வாங்கித்தர மறுத்ததால் ஆத்திரமடைந்த பெங்களூரைச் சேர்ந்த 26 வயது இளைஞன், தன் தாயையே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு அருகேயுள்ள மயிலாசந்திரா பகுதியை சேர்ந்தவர் பாத்திமா மேரி. இவருக்கு தீபக் என்ற மகனும், ஜாய்ஸ் மேரி என்ற மகளும் உள்ளனர். பாத்திமா தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை உள்ளூர் சந்தைகளில் விற்கும் தொழில் செய்து வந்தார்.
ஜூன் 1-ம் தேதி தோட்டத்துக்கு சென்றபோது மர்மநபர்கள் தனது தாயைக் கொலை செய்ததாக பாத்திமாவின் மகள் ஜாய்ஸ் மேரி காவல்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் மற்றும் அவரின் சேலையில் இருந்த கைரேகைகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து பாத்திமாவின் மகன் தீபக்கிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், " வழக்கம்போல அன்று காலையில் பாத்திமா மற்றும் தீபக் இருவரும் தோட்டத்துக்கு காய்கறிகள் பறிக்கச் சென்றனர். அங்கே தனக்கு ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு 20 ஆயிரம் ரூபாய் தரும்படி பாத்திமாவிடம் தீபக் சண்டையிட்டுள்ளார். ஆனால் தன்னால் இப்போது போன் வாங்கித்தர முடியாது என்று பாத்திமா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபக், தனது தாயையே கொடூரமாக அவரின் சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பின்னர் தாயிடம் இருந்த 700 ரூபாயை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். அதற்கு பிறகு யாரோ மர்ம நபர்கள் தனது தாயைக் கொலை செய்துவிட்டதாக குடும்பத்தினரிடம் தீபக் நாடகம் ஆடியுள்ளார். கைரேகைகளை ஆய்வு செய்த பிறகு நாங்கள் நடத்திய விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார், அவரை நேற்று கைது செய்தோம்" என தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.