ஹைதராபாத் சிறுமிக்கு நடந்தது என்ன?: போலீஸ் தந்த அதிர்ச்சி தகவல்


ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிசிடிவி காட்சிகளை வைத்து 3 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளதாக மேற்கு மண்டல துணை ஆணையர் ஜோயல் டேவிஸ் கூறியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 28-ம் தேதி கேளிக்கை விடுதியில் பார்ட்டிக்கு 17 வயது சிறுமி சென்றுள்ளார். பார்ட்டி முடிந்து திரும்பும் போது அவரை சிலர் காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர், தன் தாயிடம் நடந்தவற்றை மறைத்து தன்னை சிலர் கிண்டல் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது பெற்றோர், ஜூப்ளி ஹில்ஸ் காவல்நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், தன் மகள் உடலில் இருக்கும் காயங்களைப் பார்த்து சந்தேகமடைந்து என்ன நடந்தது என அவரது தாய் மீண்டும் விசாரித்துள்ளார். அப்போது 5 பேர் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அவரது தந்தை வெள்ளிக்கிழமையன்று காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் நேற்று இரவு சதுதீன் மாலிக் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து மேற்கு மண்டல துணை ஆணையர் ஜோயல் டேவிஸ் கூறுகையில்,” சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீது 354 மற்றும், 323 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சிறுமி சென்ற கேளிக்கை விடுதி வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அப்போது 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் சிறுமியை வீட்டில் விடுவதாக காரில் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், நகர்புறத்தில் காரை சாலையின் ஓரம் நிறுத்தி ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இன்று 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் 2 பேரைத் தேடி வருகிறோம்” என்றார்.

x