பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சால் வன்முறை... கைதானவர்களின் சொத்துக்கள் பறிமுதல்: உபி போலீஸ் அதிரடி


யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கான்பூரில் நேற்று ஏற்பட்ட இந்த மோதலில் 13 காவல் துறையினரும், இரு தரப்பையும் சேர்ந்த முப்பது பேரும் காயமடைந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண போலீஸார் இது தொடர்பாக வெளியான வீடியோக்களை ஆய்வு செய்து . இதில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய போலீஸ் கமிஷனர் விஜய் சிங் மீனா, “வீடியோக்களின் அடிப்படையில் மேலும் பலரை அடையாளம் கண்டு வருகிறோம். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

கான்பூரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, ஞானவாபி பிரச்சினை பற்றிய விவகாரத்தில் நபிகள் நாயகத்துக்கு எதிராக பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இளைஞர்கள் திடீரென வீதியில் இறங்கி கோஷமிடத் தொடங்கினர். மற்றொரு குழுவினர் அதை எதிர்த்ததால் அப்பகுதியில் கல் வீச்சு மற்றும் வன்முறை வெடித்தது.

x