திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், முருகபவனம் அருகே வசித்துவரும் லோடுமேன் சிவக்குமாரின் மகன் பிரபாகர் பெயின்டராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு வேலை முடித்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீடு புகுந்து கழுத்தை அறுத்து பிரபாகரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இக்கொலை குறித்து தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கதிரயன் குளம் அருகே முன் விரோதம் காரணமாக சிவா என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்து, வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றிய உடல்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, ரெட்டியார்சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சொத்து தகராறில் மகேந்திரன் என்ற விவசாயியை வெட்டி கொன்ற அண்ணனை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இப்படியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே இரவில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவங்களால், பொதுமக்களிடையே அதிர்ச்சியும், அச்சமும் ஏற்படுத்தியுள்ளது. சமீபமாக, பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வரும் நிலையில், தற்போது கொலை சம்பவங்கள் அரங்கேறி இருப்பது காவல் துறையினருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.