கடத்திச் சென்று மலையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: பதறவைக்கும் மாணவர்களின் செயல்


17 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்று மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் செயல்பட்டு வரும் கேளிக்கை விடுதிக்கு கடந்த 29-ம் தேதி 17 வயதுடைய சிறுமி ஒருவர் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்த அந்த சிறுமியை, வீட்டில் கொண்டு விடுவதாக அங்கிருந்த இளைஞர்கள் காரில் ஏற்றிச் சென்றனர். ஆனால், அந்த சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர்கள், ஜூப்ளி மலைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை 6 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து, அந்த சிறுமியை கேளிக்கை விடுதி அருகே விட்டுச் சென்றுள்ளனர் இளைஞர்கள்.

வீட்டிற்கு சென்ற சிறுமி, 2 நாட்களுக்கு பிறகு தனக்கு நடந்த கொடுமையை தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். இதையடுத்து, சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்ததில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையின் விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை வன்கொடுமை செய்த 6 பேரும் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். மற்ற 4 பேரை தேடி வருகின்றனர். இதனிடையே, ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

x