20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை திமுக பிரமுகரும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவருமான துறைமுகம் காஜா மொய்தீன் ஆக்கிரமித்துள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ராமமூர்த்தி. இவருக்கு முகப்பேர் பன்னீர் நகர் பகுதியில் பூர்விக நிலம் உள்ளது. அந்த இடத்தை ஆக்கிரமித்து திமுக பிரமுகர் துறைமுகம் காஜா மொய்தீன் கட்டிடம் கட்டிவருவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ராமமூர்த்தி, சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார்மனு அளித்தார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " சென்னை முகப்பேர் பன்னீர் நகரில் உள்ள எனது 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பூர்விகச் சொத்தான 3400 சதுர அடி நிலத்தை திமுக பிரமுகரும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவருமான துறைமுகம் காஜா மொய்தீன் ஆக்கிரமித்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையம் மற்றும் முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடினேன். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு நில மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுக்க, நீதிமன்றம் உத்தரவு விட்டது. ஆனால், அதன் பின்னும் எனது நிலத்தை அபகரித்த காஜா மொய்தீன் உள்ளிட்டோர் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கட்டிடமும் கட்டி வருகிறார். இதுகுறித்து கேட்டதற்கு, கொலைமிரட்டல் விடுக்கிறார். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன்" என்று கூறினார்.