நள்ளிரவில் செங்கல் சூளையில் புகுந்து சிறுவன் கொலை: தீவிரவாதிகள் அட்டகாசம்


காஷ்மீரில் நேற்று நள்ளிரவில் செங்கல் சூளையில் புகுந்து 17 வயது சிறுவனைத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக வெளி மாநிலத்தார், சிறுபான்மை மக்கள் மீது இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளராக பணியாற்றிய ராஜஸ்தானைச் சேர்ந்த விஜய்குமார் நேற்று தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த 31-ம் தேதி குல்காம் மாவட்டத்தில் பள்ளிக்குள் புகுந்து ரஜ்னி பாலா என்ற ஆசிரியையை சுட்டுக் கொலை செய்தனர். கடந்த மாதம் 26-ம் தேதி டிவி நடிகை அம்ரீன்பட்டை சுட்டுக் கொன்றனர். இதே போல ரஞ்சித், ராகுல்பட் என பலர் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் வெளி மாநிலத்தவர்கள் அச்சத்தில் உள்ளனர்.


இந்த நிலையில் நேற்று நள்ளிரவு காஷ்மீரின் பட்கம் மாவட்டம் மஹ்ரய்புரா பகுதியில் உள்ள செங்கல் சூளையில் துப்பாக்கிகளுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கு பணியாற்றிய வெளிமாநில தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பீஹாரைச் சேர்ந்த தில்குஷ் குமார் என்ற 17 வயது சிறுவன் கொல்லப்பட்டார். பஞ்சாப்பைச் சேர்ந்த ராஜன் படுகாயமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்த ராஜனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையில் ஈடுபட்ட தீவிரவாதிகளைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பட்கம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x