கல்குவாரியில் தெர்மாகோல் உதவியுடன் நீச்சல் பழகிய கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி இறந்தார். தீயணைப்பு துறையினரின் இரண்டு நாள் தேடுதலுக்குப் பின் இன்று காலை அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் தேவா . வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவர், நேற்று தனது நண்பர்களுடன் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றுள்ளார். தினேஷ் தேவாவிற்கு நீச்சல் தெரியாததால் தெர்மாகோல் உதவியுடன் நீச்சல் பழகிக் கொண்டிருந்தார். திடீரென தெர்மாகோல் நழுவியது. இதையடுத்து தண்ணீரில் தத்தளித்த அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் எதிர்பாராத நிலையில் அவர் மூழ்கினார். இதையடுத்து அவரின் நண்பர்கள் மாங்காடு காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். மேலும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்களும் அங்குச் சென்று நீரில் மூழ்கிய தினேஷ் தேவாவைத் தேடினார்கள். இரவு நேரம் ஆனால் நேற்று தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை மீண்டும் தினேஷ் தேவாவை தேடும் பணி தொடர்ந்தது. பல மணி நேரத் தேடுதலுக்குப் பின்னர் தீயணைப்புத் துறையினர் தினேஷ் தேவாவின் உடலைக் கைப்பற்றினர். மேலும் தினேஷ் தேவாவின் உடலை மாங்காடு காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.