டிக் டாக்கிலும், வேறுசில சோசியல் மீடியாக்களிலும் மனைவி நடனமாடி வீடியோ வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளாததால் கொலை செய்ததாக கணவர் பகீர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ள தெற்கு வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மனைவி ராமலெட்சுமி(35). இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கல்யாண சுந்தரம் திருப்பூரில் ஒர்க் ஷாப் வைத்திருந்தார். இதனால் இவர்கள் குடும்பத்தோடு திருப்பூரில் வசித்து வந்தனர். ராமலெட்சுமியும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிசெய்துவந்தார். தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராமலெட்சுமி தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன் தந்தை பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தார்.
நேற்று முன் தினம் இரவு இந்த வீட்டிற்குள் புகுந்த கல்யாண சுந்தரம், மனைவி ராமலெட்சுமியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். தலைமறைவாக இருந்த கல்யாண சுந்தரத்தை நேற்று நள்ளிரவு மானூர் அழகிய மண்டபம் பகுதியில் வைத்து போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, இன்று காலை கல்யாண சுந்தரத்தின் வாக்குமூலத்தை போலீஸார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அதில், ``என் மனைவி சதா சர்வநேரமும் போனில் பேசிக்கொண்டே இருந்தார். அதை கண்டித்தேன். அதேபோல், டிக்டாக், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூகவலைதளங்களிலும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வந்தார். நமக்கு குடும்பம் இருக்கிறது. இதையெல்லாம் நிறுத்திக்கொள் என பலமுறை எச்சரித்தும் என் மனைவி கேட்கவில்லை.
நான் சொன்ன அறிவுரைகளைக் கேட்காததோடு, குழந்தைகளை அழைத்துக்கொண்டு அப்பா வீட்டுக்கு வந்த கோபத்தில் கொலை செய்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார். சமூக ஊடக ஆதிக்கத்தில் இருகுழந்தைகள் வீதிக்கு வந்திருப்பது அவர்கள் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.