மது குடிக்க பணம்கேட்டுத் தன் தாயை தாக்கிய அண்ணனை உருட்டுக்கட்டையால் அடித்தே தம்பி கொலை செய்த சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நடராஜபுரம் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மனைவி ஆறுமுகத்தாய். இந்த தம்பதிக்கு ஒருமகளும், மூன்று மகன்களும் உள்ளனர். தங்கபாண்டி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலமின்மையால் இறந்துபோனார். இவர்களின் மூத்தமகன் செல்லத்துரைக்கு (26) குடிப்பழக்கம் இருந்தது. குடிப்பதற்கு பணம் கிடைக்காத நேரங்களில் தன் தாய் செல்லத்தாயை தாக்கி, பணம் கேட்பதையும் அவர் வழக்கமாக வைத்திருந்தார். நேற்று மாலையும் வழக்கம்போல் மதுகுடிக்க பணம்கேட்டு செல்லத்துரை, ஆறுமுகத்தாயிடம் தகராறு செய்தார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் கோபமடைந்த செல்லத்துரை வீட்டை விட்டு வெளியேறினார்.
ஆனால் நேற்று நள்ளிரவு போதையில் மீண்டும் வீட்டுக்கு வந்த செல்லத்துரை தன் அம்மா ஆறுமுகத்தாயிடம் நாளைக்கு குடிப்பதற்கு பணம் வேண்டும் எனக் கேட்டு தகராறு செய்தார். ஒருகட்டத்தில் தன் அம்மாவின் கழுத்தைப் பிடித்து மதுபோதையில் நெரித்தார். இதைப் பார்த்த அவரது சகோதரரும், ஆறுமுகத்தாயின் இளைய மகனுமான முத்துசெல்வம் தடுத்தார். ஆனால் செல்லத்துரை அவரையும் தாக்கினார். இதனால் வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து செல்லத்துரையை முத்துசெல்வம் தாக்கினார். இதில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே செல்லத்துரை உயிர் இழந்தார். கோவில்பட்டி மேற்கு போலீஸார் செல்லத்துரையின் உடலைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தாயைத் தாக்கிய அண்ணனை கொன்ற வழக்கில் தம்பி முத்து செல்வத்தை போலீஸார் கைது செய்தனர்.