‘போலீஸில் புகாரா அளிக்கிறாய்?’: வார்டு உறுப்பினர் வீட்டில் வெடிகுண்டு வீசிய ரவுடி!


போலீஸில் புகார் அளித்த வார்டு உறுப்பினர் வீடு மீது ரவுடி நாட்டுவெடிகுண்டு வீசிய சம்பவம் சோழவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்து சோழவரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாப்பாத்தி(50). இவர் நெற்குன்றம் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இன்று மதியம் இவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு தப்பிச் சென்றார்.

நாட்டு வெடிகுண்டு வீட்டின் வாசல் முன்பக்க தரையில் பட்டு வெடித்தது. அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து பார்த்த போது அங்கு யாரும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்து பாப்பாத்தியின் மகன் பிரபு(35), சோழாவரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வெடித்து சிதறிக் கிடந்த பொருட்களைப் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சோழவாரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர்.

அதில், நாட்டு வெடிகுண்ட வீசியவர் புதுச்சேரியை சேர்ந்த விக்கி(எ)விக்னேஷ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து தனிப்படை அமைத்து விக்னேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பிரபு கூறுகையில்," கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டின் அருகே அதே தெருவைச் சேர்ந்த ராஜ் என்பவரை ரவுடி விக்னேஷ் அரிவாளாள் வெட்டி விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து போலீஸில் தகவல் கொடுத்ததால் அவர் எங்கள் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசினார்" என்று கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x