சொத்தை அபகரித்த துணை நடிகை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வயதான தம்பதியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.
சென்னை, மேற்கு மாம்பலம் கணபதி தெருவில் வசித்து வருபவர் கஸ்தூரி(70). இவரது கணவர் மணி(71). இவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் “நாங்கள் கடந்த 1978-ம் ஆண்டு முதல் மேற்கு மாம்பலத்தில் சுமார் 3 ஆயிரம் சதுர அடியில் சொந்தமாகக் குடியிருப்பு கட்டி வசித்து வருகிறோம். மேலும் அந்த வீட்டை வாடகைக்கு விட்டு தங்களது வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்தி வருகிறோம். நகை செய்யும் தொழில் செய்து வந்த கணவர் மணி சமூக சேவைகள் செய்து வந்தநிலையில், அவருக்கு ருக்மணி என்ற துணை நடிகையின் அறிமுகம் கிடைத்தது.
நடிகை ருக்மணி மசாஜ் பார்லர் நடத்தி, தவறான நடவடிக்கையில் ஈடுபட்டது தெரிந்ததால் மணி அவரிடம் பழகுவதைத் தவிர்த்துக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மணிதான் தன்னுடைய கணவர் எனக் கூறிக் கொண்டு ருக்மணி போலி ஆவணங்களைக் காண்பித்து , வழக்கறிஞர் என்ற பெயரில் சில ரவுடிகளுடன் வீட்டிற்குள் நுழைந்தார். 50 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் இல்லையென்றால் பொய் வழக்கில் உங்களைச் சிறைக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டினார். இதற்கு அசோக் நகர் உதவி ஆணையராக இருந்த வின்சென்ட் ஜெயராஜ் மற்றும் ஆய்வாளர் சூரியலிங்கம் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். 60 ஆண்டுகள் பழமையான கட்டடம் என்பதால் அந்த வீட்டை இடிப்பதற்காக 2020-ம் ஆண்டு மாநகராட்சி அனுமதி வழங்கிய நிலையில், நடிகை ருக்மணி காவல்துறையினரின் உதவியோடு நிலத்தை அபகரிக்க முயன்று வருகிறார்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், ருக்மணியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். மேலும் வாடகை வீட்டில் வசிக்கும் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். எங்களுடைய சொத்தை மீட்டு, எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என அவர்களது புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.