மதுரை மத்திய சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக இருந்துவந்தவர் தஞ்சாவூரைச் சேர்ந்த முகமது உசைன். கடந்த மாதம் சக சிறை கைதியுடன் ஏற்பட்ட தகராறில் டியூப் லைட்டை உடைத்து தன்னைத் தானே கீறிக்கொண்டு காயமுற்று சிறை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவந்தார். இந்நிலையில், மே 27-ம் தேதி பிளேடால் தன்னைத் தானே இடது கை மற்றும் வலது காலின் தொடைப்பகுதியிலும் கிழித்துக்கொண்டார்.
இதுதொடர்பாக அங்கு பணியிலிருந்த காவலர்களை விசாரித்ததில், சிறைக்காவலர் செல்வகுமார் உணவு இடைவேளைக்குச் செல்வதற்காக உடன் பணியிலிருந்த சின்னச்சாமி என்ற காவலரிடம் பாதுகாப்புப் பொறுப்பைக் கொடுத்துச் சென்றது தெரியவந்தது.
அத்துடன், காவலர் சின்னச்சாமிதான் தனக்கு பிளேடு கொடுத்தார் என முகமது உசேன் வாக்குமூலம் அளித்திருந்தார். ‘செல்வகுமார் உணவு சாப்பிட்டுவிட்டு வந்த பின்பு நான் சென்றுவிடுவேன், பிறகு பிளேடால் கிழித்துக்கொள்’ என்று சின்னச்சாமி கூறியதாகவும், தொடர்ந்து செல்வக்குமார் சாப்பிட்டுவிட்டு வந்தவுடன் பிளேடால் தன்னைத் தானே கிழித்துக்கொண்டதாகவும் வாக்குமூலத்தில் முகமது உசேன் கூறியிருந்தார்.
இது தொடர்பாக, சிறைக் கண்காணிப்பாளர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சிறைக் காவலர் சின்னச்சாமியைத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து இன்று சிறைக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.