திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி மூதாட்டி மற்றும் 3 குழந்தைகள் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அருகே பிரம்மதேசத்தை அடுத்த பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் மனைவி புஷ்பா(60). இவரது மகள் விஜயஸ்ரீ.
இவரை 15 ஆண்டுகளுக்கு முன் தென்களவாய் கிராமத்தைச் சேர்ந்த சுவாமிநாதனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இத்தம்பதியினருக்கு வினோதினி(14). ஷாலினி(10) என்ற மகள்களும், கிருஷ்ணன் (8) என்ற மகனும் இருந்தனர். இவர்கள் மூவரும் திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
விடுமுறை காரணமாக புஷ்பா வீட்டிற்கு வந்த பேரக் குழந்தைகள், பாட்டியுடன் அதே பகுதியில் உள்ள கல் குவாரி குட்டையில் துணி துவைக்க இன்று சென்றனர். குட்டையில் இறங்கி துணி துவைக்கும் போது நான்கு பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் 4 பேரும் நீரில் மூழ்கினர்.
இதனால் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதனிடையே ஊர் மக்கள், நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகு நேரத்துக்கு பிறகு குட்டையில் மூழ்கிய புஷ்பா, வினோதினி, ஷாலினி, கிருஷ்ணா ஆகியோரின் உடல்களை மீட்டனர். பிரம்மதேசம் போலீஸார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.