மதிப்பு ஒரு கோடி ரூபாய்... ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்ற போதைப் பொருள்: சிக்கியது கும்பல்


கொரியர் மூலம் வளையல் பெட்டியில் மறைத்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மண்ணடி பகுதியில் விலையுயர்ந்த போதை பொருட்கள் விற்பனை செய்து கடத்தப்படுவதாக வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு ரகசிய தகவல கிடைத்தது. இதையடுத்து, துறைமுகம் உதவி ஆணையர் வீரகுமார் தலைமையிலான போலீஸார் சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது, மண்ணடி பகுதியில் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட ஜாகீர் ஹுசைன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் முகமது சுல்தான், நாசர், ஜுனைத், அசார் ஆகிய 5 பேரை அடுத்தடுத்து போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

கூலி தொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் இவர்கள், விலையுயர்ந்த மெத்தம்பெட்டமைன் மற்றும் ஆம்பிடமைன் போன்ற போதை பொருட்களை மொத்த விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. தற்போது 2 கிலோ மெத்தம்பெடைமைன் மற்றும் 2.5 கிலோ ஆம்பிடைமைன் போதை பொருட்களை வளையல் பெட்டிக்குள் மறைத்து கொரியரில் சரக்கு விமானம் மூலம் இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு 1 கோடி என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் போதை பொருட்களை விற்க பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 8 செல்போன்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் வேலூரில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் இருந்து சட்டவிரோதமாக போதை பொருளை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டதும், வெளிநாட்டினருடன் தொடர்பு உள்ளதால் அவர்களது செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்ப காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த முக்கிய 2 நபர்களை பிடிக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

x