பல்லாவரம் அருகே கஞ்சா விற்ற ஒடிசா தம்பதி கைது: 2 கிலோ கஞ்சா பறிமுதல்


பம்மல்: பல்லாவரம் அருகே கஞ்சா கடத்தி, விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பல்லாவரம் அடுத்த பம்மல், நாகல்கேணி பகுதியில் ஆண்,பெண் என்று இருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக நேற்று சங்கர் நகர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீஸார், நாகல்கேணியில் உள்ள பிரபல தனியார் மீன் மார்க்கெட் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திடமாக வகையில் சுற்றித் திரிந்த ஆண், பெண் இருவரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸாரின் விசாரணையில் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்து பார்த்த போது அதில், சிறு சிறு பொட்டலங்களாக சுமார் 2 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அவர்களை கைது செய்து சங்கர் நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

இதில் பிடிக்கப்பட்ட இருவரும் ஒடிசா மாநிலம், நவுபடா மாவட்டம், இராணி முல்லா பகுதியைச் சேர்ந்த சியாம் ஹான்ஸ் (30) மற்றும் அவரது மனைவி பிரதீபா (29) என்பது தெரியவந்தது. கணவன், மனைவி இருவருமாக சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் போலீஸாருக்கு சந்தேகம் வராது என்பதற்காக இவ்வாறு கஞ்சாவை ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வந்து, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.