`உனக்காகத்தானே சிறை சென்றேன்; திருமணம் செய்துகொள்'- மாணவியை குத்திவிட்டு தப்பிய வாலிபர் தற்கொலை?


கத்திக்குத்து பட்டு கிடக்கும் மாணவி

திருச்சி அருகே 11ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திவிட்டு ஓடிய இளைஞர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மணப்பாறை கீரைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, மணப்பாறை அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று (மே 31) மாலை பள்ளிக்கு சென்ற அவர் தேர்வு முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். ரயில்ரோடு மேம்பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் அவர் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் மாணவியின் கழுத்து உட்பட பல இடங்களில் குத்துபட்டது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் அதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். சிலர் அந்த இளைஞரைத் துரத்திப் பிடிக்க முயன்றனர். அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

கேசவன்

கத்திக்குத்து பட்டதில் ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பொத்தமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணி என்பவரின் மகன் கேசவன் இந்த சிறுமியை காதலித்து வந்த நிலையில், போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். வெளியே வந்த கேசவன், மாணவியை சந்தித்துள்ளார். அப்போது, ``உனக்காகத்தானே சிறை சென்றேன். என்னை திருமணம் செய்து கொள்'' என்று வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதையடுத்து பழிவாங்கும் நோக்கில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்தது .

இதனையடுத்து தப்பி ஓடிய இளைஞரை மணப்பாறை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை கீழ பூசாரிபட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஒருவர் அடிபட்ட நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார், அது கேசவனாக இருக்கக்கூடும் என்ற ஐயத்தில் அவரது தந்தையை அழைத்து வந்து உடலை காண்பித்தனர். அவர் கேசவன்தான் என்று அடையாளம் காட்டினார். அதனையடுத்து அவரது உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். கேசவன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது மரணத்தில் வேறு மர்மம் இருக்கிறதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x