பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்: செவிலியர் எடுத்த விபரீத முடிவு


தனியார் மருத்துவமனையில் பணிசெய்த மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் செவிலியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவில் ஸ்ரீமுரளி என்னும் பெயரில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் செவிலியராக வேலை செய்துவந்தார். அவருக்குத் திருமணம் முடிந்து, இரு குழந்தைகளும் உள்ளனர். அவரது கணவர் கோயம்புத்தூரில் வேலை செய்துவருகிறார்.

தனியார் மருத்துமனையின் முதன்மை மருத்துவர் முரளி, சிலதினங்களுக்கு முன்பு செவிலியரிடம் அத்துமீற முயன்றுள்ளார். இதனால் மனவேதனையடைந்த செவிலியர், தன் கணவரிடம் இதை அழைத்துச் சொன்னார். அவரும் வேலையைவிட்டு நின்றுவிட அறிவுறுத்தியதால், வேலையைவிட்டு நின்றுவிட்டார். ஆனாலும் மருத்துவமனையில் மருத்துவர் தன்னிடம் அத்துமீற முயன்றதை செவிலியரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த சில தினங்களாகவே இதனால் மனவேதனையில் இருந்தவர் நேற்று நள்ளிரவு தூக்க மாத்திரை, பினாயிலைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அக்கம்பக்கத்தினர் அந்தப் பெண்ணை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அவர் அளித்த புகாரின் பேரில் மருத்துவர் முரளி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x