ஆண் நண்பர் மீது தாக்குதல்... சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: கேரளத்தில் நடந்த கொடுமை


கேரளத்தில் 15 வயது சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் எதிரொலியாகக் கேரளத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் களைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சாந்தன்பாறை என்னும் இடத்தில் ஏலக்காய் தோட்டம் ஒன்று உள்ளது. இங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 15 வயது சிறுமி ஒருவரும் வேலைசெய்து வந்தார். இவர் தன் ஆண் நண்பர் ஒருவரோடு தேயிலைத் தோட்டத்தை சுற்றிப் பார்க்க பூப்பாறை பகுதிக்கு வந்துள்ளார். இவர்கள் தேயிலைத் தோட்டத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, தோட்டத்திற்குள் புகுந்த அப்பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆண் நண்பரைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு, சிறுமியை கூட்டுப் பாலியல் வன்மம் செய்தது. தாக்குதலுக்கு உள்ளான ஆண் நண்பரின் அழுகுரல் கேட்டு, அப்பகுதிவாசிகள் வந்தனர். உடனே பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் தப்பியோடியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பூப்பாறை போலீஸார், ஆறுபேர் கொண்ட கும்பலில் பூப்பாறையைச் சேர்ந்த சாமுவேல் என்கிற சைமன்(22), அரவிந்த்(22) உள்பட ஆறுபேரையும் கைது செய்தனர். 6 பேர் கொண்ட குற்றவாளிப் பட்டியலில் இருவர் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பது இன்னும் அதிர்ச்சியளிக்கும் விசயம். குற்றச் செயலில் ஈடுபட்ட 6 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

x