கேரளத்துக்கு கடத்தப்பட்ட 300 டன் கனிமவளம்: வாகன சோதனையில் சிக்கியது 5 லாரிகள்


குவாரி

திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு பகுதியில் கேரளாவுக்கு கனிமவளங்களை கடத்திச் சென்ற 5 லாரிகளும், அதில் இருந்த 300 டன் கனிமங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை குவாரி விபத்து

திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வந்தது. இங்கு கடந்த 14-ம் தேதி இரவு 350 அடி ஆழம் கொண்ட இந்தக் கல்குவாரியில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுவந்தபோது பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் நான்கு தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். தமிழக அரசின் சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 15 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

நான்கு தொழிலாளர்களின் உயிரைக் குடித்த குவாரி விவகாரத்தில் முன்னீர்பள்ளம் போலீஸார், குவாரி குத்தகைதாரர் சங்கர நாராயணன், குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த குவாரி விபத்து தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்குப் பின்னர் நெல்லை மாவட்டத்தில் கனிம முறைகேடு, கடத்தலை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வள்ளியூர் போலீஸாருக்கு காவல்கிணறு வழியாக குமரி மாவட்டத்திற்குள் நுழைந்து கேரளாவுக்கு கனிமங்கள் கடத்தப்படுவதாகத் தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து வள்ளியூர் போலீஸார் காவல்கிணறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முறையான அனுமதி, ஆவணங்கள் இன்றி கேரளாவுக்கு கனிமங்கள் கடத்திச் சென்ற 5 லாரிகளை மடக்கிப் பிடித்தனர். அதில் 300 டன் அளவுக்கு எம் சாண்ட் (பாறைப் பொடி), மண் ஆகியவை இருந்தது. பிடிபட்ட லாரி ஓட்டுநர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

x