எனது வீட்டின் விலை 2 கோடி... ஆன்லைனில் விளம்பரம் செய்த ரியல் எஸ்டேட் அதிபர்: வீடு புகுந்து கடத்திய கும்பல்


கடத்தல்

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கத்தியைக் காட்டி காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புகாரில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபரை காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

சென்னை மாங்காடு அடுத்த கோவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவரின் வீட்டிற்கு மர்ம நபர்கள் சிலர் திடீரென சென்று கத்தியைக் காட்டி மிரட்டி காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து மாங்காடு காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள் விசாரணையைத் தொடங்கினர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுரேஷ்குமார் திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோருடன் வாழ்வதும், தனக்குச் சொந்தமான ஒரு வீட்டை 2 கோடிக்கு விற்பனை செய்ய ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார்.

வீடு விற்பனை குறித்து பல்வேறு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில், முன் தொகை கொடுப்பதற்காக நேற்று சிலர் சுரேஷ்குமாரின் வீட்டிற்கு வந்துள்ளனர். அவருக்கு அறிமுகமானவர்கள் என்பதால் அவர்களை வீட்டில் அழைத்துப் பேசி இருக்கிறார். அப்போது திடீரென கத்தியைக் காட்டி அவரின் கை, கால்களை கட்டிப் போட்டு காரில் கடத்தியுள்ளதாகவும், மேலும் ஒரு கோடி கேட்டு அவர் மிரட்டப்பட்டதாகவும் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சொகுசு காரில் வந்த சிலரைக் கைது செய்த தனிப்படையினர் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிடிபட்டவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மாங்காடு காவல் துறையினர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர். முன்விரோதம் காரணமா, கொடுக்கல் வாங்கல் பிரச்சினையா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x