விடுவிக்கப்பட்ட ஷாருக் மகன்; விடை தீராத விவகாரங்கள்!


ஆர்யன் கான்

கடந்தாண்டு அக்.2 நள்ளிரவில், மும்பை அருகே அரபிக்கடலில் மிதந்த சொகுசுக் கப்பலில் பிரம்மாண்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன் விருந்தினர் மத்தியிலான போதைப்பொருள் உபயோகம் குறித்து மத்திய போதை தடுப்பு பிரிவான என்சிபி-யின் மும்பை மண்டல அதிகாரிகளுக்கு மூக்கு வேர்த்தது. என்சிபி மும்பை இயக்குநர் சமீர் வான்கடே தலைமையிலான இளம் அதிகாரிகள் மாறுவேடத்தில் கப்பலில் ஊடுருவினர்.

எதிர்பார்த்தது போலவே, தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை உபயோகித்ததாக 20 நபர்களை பெருமிதத்துடன் அள்ளி வந்தனர். அதிகாரிகளின் வழக்கமான ரெய்டு நடவடிக்கை அடுத்த நாள் தேசத்தின் தலைப்பு செய்தியாகும் என்று என்சிபி உட்பட எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. கைதானவர்களில் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானும் இருந்ததை அதிகாரிகள் தாமதமாகவே அடையாளம் கண்டனர்.

அதே வேளையில் உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் ஆளும்கட்சி பிரமுகர்களால் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக நாடே கொந்தளித்தது. வட இந்தியாவின் 5 மாநில தேர்தலை எதிர்நோக்கியிருந்த மாநில, மத்திய அரசுகளுக்கு இந்த மக்கள் கொந்தளிப்பு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. சாதாரண போதை வழக்காக போயிருக்க வேண்டிய ஆர்யன் கான் கைது விவகாரம் காட்டுத்தீயாக ஊடகங்களில் ஊதப்பெற்றது. எதிர்பார்த்தது போலவே ஷாருக் கான் பிரபல்யத்தின் முன்பாக, விவசாயிகள் கொலையான விவகாரம் உரிய கவனத்தை இழந்தது.

தந்தை ஷாருக் உடன் ஆர்யன்

’ஆர்யன் கான் தொடர் போதைப் பொருள் உபயோகிப்பாளர் என்றும் அவருக்கு சர்வதேச போதை விற்பனையாளர்களுடன் தொடர்பு இருந்ததாகவும்’ அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் வெளியாகி ஆர்யன் விவகாரத்தை ஆறாது செய்தார்கள். பாலிவுட் பிரபலங்களும், அவர்களின் போதை உபயோகமும் அவ்வப்போதான வழக்குகளும் மும்பையில் சாதாரணமானவை. ஆனால் ஆர்யன் கான் விவகாரம் ஊதிப் பெருக்கப்பட்டதில் பாலிவுட் அதிர்ந்தாலும் அடக்கியே வாசித்தது. காரணம் என்சிபியின் மும்பை இயக்குநரான சமீர் வான்கடே!. சாதாரண ஐஆர்எஸ் அதிகாரியான வான்கடே, தனது வழக்கு விசாரணைகளில் காட்டும் கெடுபிடிகள் அப்படியானது.

சமீர் வான்கடே

முன்னதாக சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்குக்கான விசாரணையில் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரதா கபூர், சரா அலி கான் என சுமார் அரை டஜன் பாலிவுட் நாயகிகளை சம்மன் தொடுத்து விசாரணையின் பெயரில் அலைக்கழித்ததாக வான்கடே மீது பாலிவுட்டின் வருத்தம் இருந்தது. மும்பை விமான நிலையத்தின் கஸ்டம்ஸ் பிரிவில் (2011) சமீர் வான்கடே பணியாற்றிபோது, சோதனை என்ற பெயரில் பல பாலிவுட் பிரபலங்களை இழுத்தடித்ததாகவும் குற்றச்சாட்டு உண்டு. வருமான வரித்துறையில் சிலகாலம் பணியாற்றியபோது ராம்கோபால் வர்மா, விவேக் ஓபராய், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்கள் வான்கடே விசாரணையில் சிக்கி அலைக்கழிந்துள்ளனர். தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ-வில் குறுகிய காலம் பணியாற்றிய அனுபவமும் வான்கடேவின் அதிரடி நடவடிக்கைகள் அடிக்கடி வெளிப்படும்.

இவ்வாறு பாலிவுட் அடக்கி வாசிக்க, மகாராஷ்டிர அமைச்சர் ஒருவரிடமிருந்து வான்கடேவுக்கு எதிரான ஆட்சேபக் குரல் எழுந்தது. கூட்டணி அரசில் பங்கு வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக், சமீர் வான்கடேவுக்கு எதிராக சமர் தொடங்கினார். தனது மருமகன் சமீர் கான் என்பவரை போதை வழக்கில் (2021 ஜனவரி) கைது செய்தது தொடர்பாக சமீர் வான்கடேவுடன் முன்பகை கொண்டிருந்தார் அமைச்சர் நவாப் மாலிக். எனவே, ஆர்யன் கைது நடைமுறையின் அத்துமீறல்கள் என பலவற்றை நவாப் மாலிக் அம்பலப்படுத்த ஆரம்பித்தார். இந்த மோதல் தனிப்பட்ட வகையிலும் திரும்ப, இருதரப்பு குடும்பத்தினரும் பரஸ்பரம் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உதவி கோருமளவுக்கு மோசமானது.

நவாப் மாலிக்

’ஆர்யன் கானை விடுவிக்க ஷாருக்கிடம் சமீர் வான்கடே லஞ்சமாக பெருந்தொகை கேட்டார், பாலிவுட் பிரபலங்களை மிரட்டி ஆதாயம் பெறுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் என்பதன் வரிசையில் போலியான சாதி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்திருக்கிறார்’ என்ற பிரம்மாஸ்திரம் வரை நவாப் மாலிக் வீசினார். இதில் போலி சான்றிதழ் விவகாரத்தில் துறைரீதியிலான விசாரணையில் சிக்கிய வான்கடேவின் குடிமைப்பணி தற்போது ஊசலாடி வருகிறது. பதிலடியாக, ’பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் குடும்பத்தினருடன் நவாப் மாலிக் தொடர்பில் இருக்கிறார்’ என்று சமீர் வான்கடே கிளப்பிய புகாரால் பிற்பாடு அமலாக்கத்துறை மற்றும் என்ஐஏ விசாரணை மற்றும் கைதுக்கு ஆளானார் நவாப் மாலிக்.

இதனிடையே துல்லிய சட்டப் போராட்டத்தின் மூலம் அக்.30 அன்று மகன் ஆர்யன் கானின் ஜாமீன் வழக்கில் ஷாருக் கான் வெற்றி பெற்றார். ஜாமீன் வழக்கின் தோல்வியில் சமீர் வான்கடேவின் சரிவு தொடங்கியது. ஆர்யன் கான் விசாரணையில் சொதப்பியதாக என்சிபிக்கு வெளியே வான்கடே தூக்கியடிக்கப்பட்டார்.

வழக்கறிஞர் குழுவுடன் ஷாருக்

இந்த சூழலில் நேற்றைய (மே 27) தினம் மும்பை போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் என்சிபி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஆர்யன் கான் உட்பட 6 பேர் முற்றிலுமாக விடுவிக்கப்பட்டிருந்தனர். மேலும் ஆர்யன் கான் விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

2021 அக்டோபர் மாதம் நெடுக சமீர் வான்கடே தலைமையிலான விசாரணை, அதன் பிறகு 7 மாதங்களாக டெல்லி என்சிபியின் சிறப்பு புலனாய்வு குழுவின் தீவிர விசாரணை ஆகியவற்றில் உருவான 6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை உப்பு பெறாது முடிந்துள்ளது. ஆர்யன் கான் கைது முதல் தற்போது அவர் விடுவிக்கப்பட்ட வரை விடை தெரியா கேள்விகள் ஏராளமாய் தொக்கி நிற்கின்றன.

ஆர்யன் கானுக்கு எதிராக அதீத விரைப்பு காட்டிய என்சிபி விசாரணை பின்னர் வால் சுருட்டியது ஏன்? விசாரணையில் சூரப்புலியான சமீர் வான்கடே ஆர்யன் கான் கைது நடவடிக்கைகளை உரிய முறையில் ஆவணப்படுத்தாததும், சொகுசுக் கப்பல் சோதனையை வீடியோ எடுக்காததும் உயரதிகாரிகள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆர்யன் கானின் வாட்ஸ் அப் தடயங்களை வைத்து சர்வதேச போதை தரகர்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டவர்கள் பின்னர் அதில் சுரத்து இறங்கியது ஏன்? ஆர்யன் கான் கைதின் போது தனியார் துப்பறிவாளராக தன்னை காட்டிக்கொண்ட கிரண் கோஸாவி, என்சிபி நடவடிக்கை தொடர்பாக எழுப்பிய குற்றச்சாட்டுகள் பிற்பாடு நமுத்துபோனது எப்படி? கிரணின் பாதுகாவலராக சொகுசுக் கப்பலில் உடனிருந்து கைதானவர் பிரபாகர் செய்ல். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இந்த பிரபாகர் புலம்பிய நிலையில், ஏப்ரல் தொடக்கத்தில் திடீர் மாரடைப்பில் மரணமடைந்து தொடர்பான மர்மங்களுக்கும் விடையில்லை.

பிரபாகர் செய்ல்

இவை மட்டுமன்றி ஆர்யன் கான் வழக்கை சமீர் வான்கடே இழுத்தடித்தது மற்றும் ஊதிப் பெருக்கியதன் பின்னணியில் அவரை இயக்கிய சக்திகள் குறித்தும், சமீரின் செயல்பாடுகளை பலமாக ஆதரித்த டெல்லி மேலிடம் பிற்பாடு அவரை கைவிட்டது குறித்தும் கேள்விகள் உண்டு. 30 அதிகாரிகள் கொண்ட குழுவில் சமீர் மட்டுமே பலியாடு ஆக்கப்பட்டிருப்பதும் என்சிபியை உலுக்குகிறது. ஊசலாடும் பணி, காத்திருக்கும் கைது நடவடிக்கை ஆகியவற்றால் சமீர் வான்கடே விரைவில் வாய் திறக்கலாம் என்றும் அப்படி அவர் முயன்றால் பிரபாகர் செய்லுக்கு நேரிட்ட அபாயம் வான்கடேவை அச்சுறுத்தவும் வாய்ப்பிருக்கிறது.

வாய் திறவா வான்கடே

இந்த தனிப்பட்ட வழக்கு விசாரணை அப்பால், ஆர்யன் கானுக்கு எதிரான போதை வழக்கு முற்றிலுமாக நீர்த்துப்போனதில், மும்பையை ஆட்டிப்படைக்கும் போதை தடுப்பு நடவடிக்கைகளில் இனி சுணக்கமே தொனிக்கும். ஆர்யன் கான் கைது மற்றும் விடுவிப்பு, அதிகாரி சமீர் வான்கடேவுக்கான ஆதரவு மற்றும் நிராகரிப்பு ஆகியவற்றின் பின்னணியில் மறைந்திருக்கும், அரசியல் மற்றும் அதிகார மர்மங்கள் வெளிப்படுவதும் அத்தனை எளிதல்ல.

x