நள்ளிரவில் மனைவி, பிள்ளைகளை கொடூரமாக கொன்ற தந்தை: சென்னையில் அதிர்ச்சி


சென்னையை அடுத்த பொழிச்சலூரில் மனைவி மற்றும் இரு பிள்ளைகளை மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுத்து கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(42). இவருக்கு திருமணமாகி காயத்ரி (39) என்ற மனைவியும், நித்யஸ்ரீ (13), ஹரி கிருஷ்ணன்(8), என்ற மகனும், மகளும் உள்ளனர். பிரகாஷ் அதே பகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வருகின்றார். கடந்த சில மாதங்களாக பிரகாஷ் கடன் தொல்லையால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன்- மனைவி இடையே தகாரறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மரம் அறுக்கும் இயந்திரதால் தன் இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை நீண்ட நேரமாக யாரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து சங்கர்நகர் காவல் நிலையதிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சங்கர்நகர் போலீஸார் விரைந்து சென்று 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சினை காரணமாகவே பிரகாஷ் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் பிரகாஷ் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றி போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி, பிள்ளைகளை கொலை செய்து விட்டு பிரகாஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

x